கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பிறழ் சாட்சியம் அளித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், சாட்சிகள் விசாரணை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதியன்று மாலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல் அவரை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என அப்போது தகவல்கள் பரவின.
இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டிருந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான ஜோதிமணி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமுதரசு தலைமறைவாகிவிட்டார். இந்த இருவரையும் தவிர மற்ற 15 பேரும் தொடர்ந்து சாட்சி விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் கல்லூரித் தோழி சுவாதி, அவருடைய தாயார் செல்வி ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்துள்ள நிலையில் அக்டோபர் 1, 2018ம் தேதி இதர சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பகல் 12.10 மணியளவில் விசாரணை தொடங்கியது.
முதல் சாட்சியாக வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் புஷ்பலதா அழைக்கப்பட்டார். அவரிடம், சம்பவம் நடந்த நாளான 23.6.2015ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து கோகுல்ராஜை யுவராஜ் தரப்பினர் கடத்திச்செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும் வெள்ளை நிற டாடா சபாரி கார் யார் பெயரில் பதிவாகி இருக்கிறது? என்று அரசுத்ததரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டார். கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் யுவராஜ் பெயரில் பதிவாகவில்லை. வேறு நபரின் பெயரில் பதிவாகி இருப்பதாக கூறினார்.
அவரை தொடர்ந்து அச்சக உரிமையாளர் வடிவேல், பருத்தி கிடங்கு உரிமையாளர் சிரஞ்சீவி, யுவராஜின் பக்கத்து தோட்டக்காரர் நவீன்ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்கள் மூவருமே கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட ஜேஎம்&2 நீதிமன்றத்தில் சிஆர்பிசி 164 வாக்குமூலத்தின்போது யுவராஜ் தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்து இருந்தனர். ஆனால் அக்டோபர் 1ம் தேதியன்று நடந்த விசாரணையின்போது மூவருமே பிறழ் சாட்சியமாக மாறினர்.
அச்சக உரிமையாளர் வடிவேல், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு துண்டறிக்கை அச்சிட்டு கொடுத்ததாக முன்பு வாக்குமூலம் அளித்திருந்தார். நேற்று முன்தினம் சாட்சி விசாரணையின்போது யுவராஜை யாரென்று தெரியாது என்றும், தான் அவருக்கு துண்டறிக்கை அச்சடித்துக் கொடுக்கவில்லை என்றும் கூறி பல்டி அடித்தார்.
அரசுத்தரப்பில் 13வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள சிரஞ்சீவிக்குச் சொந்தமான பருத்தி கிடங்கில்தான் அப்போது யுவராஜ் தரப்பினர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதற்காக அச்சிடப்பட்ட துண்டறிக்கையிலும்கூட அந்த கிடங்கில்தான் கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் சாட்சியம் அளித்தபோது, தன்னிடம் இருப்பது பருத்தி கிடங்கே அல்ல. அந்த இடம் பருத்தி அரைக்கும் இடம். அந்த இடத்தில் போய் யாராவது கூட்டம் நடத்த வாடகைக்கு விட முடியுமா? என்று பல்டி சாட்சியம் அளித்தார். அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி யுவராஜ் தரப்பு வெளியிட்டிருந்த துண்டறிக்கையில் உங்களுக்குச் சொந்தமான பருத்தி கிடங்கில்தான் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கும் இடமாக குறிப்பிடப்பட்டு உள்ளதே என்று கேட்டார்.
அதற்கு சிரஞ்சீவி, துண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் இருக்கும் இடம் எனக்குச் சொந்தமான பருத்தி அரைக்கும் இடம்தான். அந்த இடம் எப்படி துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது என்பது எனக்குத் தெரியாது என பதில் அளித்தார்.
குற்றவாளி கூண்டில் இருக்கும் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரையும் காட்டி, அவர்களை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கும் அவர் தெரியாது என்று பதில் அளித்தார். பின்னர் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ''யுவராஜூம் நீங்களும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் முன்பு சொன்ன சாட்சியத்தை மறைத்து இப்போது பொய் சாட்சி சொல்கிறீர்கள் என நான் சொல்கிறேன்,'' என்றார்.
அதற்கு, நாங்கள் எல்லோரும் மனசாட்சியுடன்தான் உண்மையை சொல்கிறோம் என்று சிரஞ்சீவி சொன்னார். எல்லோரும் என்று சொல்லும்போது கையை உயர்த்தி எல்லோரும் என கையை வளைத்துச் சொன்னார். அதற்கு கருணாநிதி, எல்லோரும் என்பதை விடுங்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கேட்டார். அதற்கு சிரஞ்சீவி, தவறு என்று பதில் அளித்தார்.
யுவராஜ் தோட்டத்திற்கும் அருகே உள்ள தோட்ட உரிமையாளரான நவீன்ராஜ், சம்பவம் நடந்த அன்று ஒரு காரில் ஒல்லியான தேகம் கொண்ட நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த ஒரு வாலிபரை (கோகுல்ராஜ்) காரில் ஏற்றிச்சென்றதை பார்த்தேன் என்று முன்பு சிஆர்பிசி 164 வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அதனால் நவீன்ராஜின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான நவீன்ராஜ், அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிடுவதுபோல் சம்பவத்தன்று யாரையும் நான் பார்க்கவில்லை என்று கூறினார். குற்றவாளி கூண்டில் உள்ளவர்களைக் காட்டி அவர்களை முன்பே தெரியுமா எனக்கேட்டதற்கு யுவராஜ் மற்றும் அவருடைய சகோதரர் தங்கதுரை ஆகியோரை தெரியும் என்று பதில் அளித்தார்.
யுவராஜீக்கு நீங்கள் பத்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்து இருந்தீர்கள். அவர் கொடுத்த காசோலை செல்லாததால் அதன் மீது வழக்கு தொடர்ந்தீர்கள். அந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததா? என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கு சிரஞ்சீவி ஆமாம் என்று பதில் அளித்தார். அப்போது, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., இந்தக் கேள்விக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதை நீதிபதி நிராகரித்தார்.
அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, காசோலை வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், இன்னும் யுவராஜ் உங்களுக்கு பணம் தரவில்லை. அவருக்கு எதிராக சாட்சி சொன்னால் உங்களுக்கு அவர் பணம் தராமல் போகலாம். மேலும் நீங்களும் அவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவருக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்கிறீர்கள் என்றார். அதற்கு நவீன்ராஜ், இல்லை என்று பதில் அளித்தார்.
அப்போதும் குறுக்கீடு செய்த எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, காசோலை வழக்கை தொடர்ந்தது நவீன்ராஜின் அண்ணன்தான். அவருக்குதான் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது என்றார். அந்த கருத்தும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மதியம் 1.15 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. பின்னர் 2.20 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.
ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம் கிடந்ததைப் பார்த்த ரயில்வே கேங்மேன் கார்த்திக், யுவராஜ் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது உடன் இருந்த கிராம நிர்வாக அலுவலர் உஷாபிரியா, மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான சங்கர் வீட்டில் சோதனை நடந்தபோது உடன் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன், கோகுல்ராஜின் சடலத்தைப் பார்த்த கிராம நிர்வாக உதவியாளர் பூபதிராஜா ஆகியோரும் சாட்சியம் அளித்தனர்.
காலையில் சாட்சியம் அளித்த அச்சக உரிமையாளர் வடிவேலிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மேலும் சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்ததால் அவர் மீண்டும் அழைக்கப்பட்டார். அவரிடம் யுவராஜ் தரப்பு வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு துண்டறிக்கையைக் காட்டி, அதில் குறிப்பிட்டிருப்பது உங்கள் கையெழுத்தா? என்று கேட்டார். அதற்கு இல்லை என வடிவேல் கூறினார். அந்த துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது உங்கள் செல்போன் நம்பர்தானா? என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று பதில் சொன்ன வடிவேல், தான் அந்த துண்டறிக்கையை அச்சடித்து கொடுக்கவில்லை என்று மீண்டும் கூறினார்.
அத்துடன் சாட்சி விசாரணை முடிந்தது. அப்போது மாலை 5.30 மணி. இதையடுத்து சாட்சிகள் மீதான அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி கே.ஹெச்.இளவழகன் கூறினார்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அரசுத்தரப்பில் அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் தவிர மற்ற சாட்சிகளான சிரஞ்சீவி, வடிவேல், நவீன்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பல்டி சாட்சியம் அளித்ததால், சிபிசிஐடி போலீசார் கடும் அதிருப்தி அடைந்தனர்.