கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மனைவியை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
திருவாரூர் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (42), இவர் தங்கநகை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு பத்மாவதி (30) என்ற மனைவியும் ஆறு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பத்மாவதி திருச்சிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று கணவர் வீரமணி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மனைவி காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் அளித்துள்ளார். இதையறிந்த மனைவி பத்மாவதி வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவருடன் தாலுகா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு நின்றபோது அங்கே வந்த வீரமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வீரமணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி பத்மாவதியை சரமாரியாக குத்தியதில் படுகாயமடைந்தார். மனைவியை குத்தியதோடு இல்லாமல் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த காவல் நிலையத்திலிருந்த காவலர்கள், இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.