டெல்லி சென்று திரும்பிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த 17 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 67 பேருக்கு பரிசோதனை செய்வதற்கான அழைப்பு அனைவருக்கும் அனுப்பப்பட்டது. இவர்களோடு தனிப்பட்ட முறையில் தாமாக முன்வந்த 21 பேர் என மொத்தம் 88 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் 17 பேர் குடும்பத்தில் 3 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இந்த 3 பேரில் சிகிச்சைக்காக் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆக மாட்டேன் என்று முரண்டு பண்ணினார். இதனால் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சென்ற சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்கு வருமாறு அழைத்தனர். அவர் சிகிச்சைக்கு வர மறுத்ததுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிக்கு போன் போட்டு சொல்லியிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கரோனா நோயாளி நான் மட்டும் கரோனாவில் சாக வேண்டுமா? முடியாது நீங்களும் சாகுங்கள் என்று முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி டாக்டர்கள் மீதும் வீசியும், செவிலியர் மீது எச்சில் துப்பியும் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து அரசு மருத்துவமனை செவிலியர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எச்சில் துப்பிய கரோனா நோயாளி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.