தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை என்பது பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருச்சி, முசிறி, கரூர் ஆகிய இடங்களில் உள்ள குவாரிகளில் மணல் அள்ள தடைவிதித்து மதுரை உயர்நீதிமன்றம் அறிவிப்பு கொடுத்தது. அதனால் திருச்சி பகுதியில் மணல் அள்ளுவது என்பது பகல் நேரங்களில் குறைந்து விட்டது என்றாலும் இரவு நேரங்களில் பல இடங்களில் இன்னமும் மணல் கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த மணல் கொள்ளைக்கு பின்னால் ஆளும் கட்சியின் அரசியல் வாதிகள் நேரடியாக தலையீடு இருப்பதால் அதிகாரிகள் எல்லோரும் அரசியல் வாதிகளுக்கு பயந்து மணல் கொள்ளைக்கு உடந்தையாகி விடுகிறார்கள். கேட்கிற பணம் கிடைப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். ஆனால் மணல் கொள்ளையினால் பாதிக்கப்படும் பொதுமக்களின் விடா முயற்சியால் பல இடங்களில் மணல் கொள்ளைகள் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அத்தனை முயற்சிகளையும் அதிகாரிகள் தடுத்து விடுகிறார்கள் என்பதற்கு முசிறி மணல் கொள்ளை சம்பவம் உதாரணம்.
முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரத்தில் உள்ள மணல் குவாரியை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மூடப்பட்டது. முசிறியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக அதிமுக செல்வராஜ் உள்ளார். இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மதுரா சம்பத். இவர் முசிறியில் மெடிக்கல் கடை வைத்திருக்கிறார். இவர் எம்.எல்.ஏ. செல்வராஜ் உதவியுடன் 6 க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்து நீதிமன்ற உத்தரவை மீறி மூடப்பட்ட மணல் குவாரியில் திருட்டுத்தனமாக தினமும் இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இங்கே எடுக்கப்படும் மணல்கள் எல்லாம் உமையாள் புரத்தில் எதிரே உள்ள புதிதாக வாங்கிய எம்.எல்.ஏ. செல்வராஜ்க்கு வேண்டப்பட்ட 7 ஏக்கர் நிலத்தில் மணலை கொண்டு போய் ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். அங்கே இருந்து நாமக்கல் நெடுஞ்சாலை வழியே மணல் கடத்தி செல்கிறார்கள். இதற்கு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியை மேற்கொள்ளும் போலீசார் முழுக்க துணையாக இருக்கிறார்கள்.
பிறகு அந்த ஏரியா பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தவுடன் அதிகாலையில் மணல் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அந்த ஏரியா தாசில்தார் சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் தவிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று திருச்சி கலெக்டர் சிவராசுக்கு மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்ததும், அவர் மாவட்ட எஸ்.பியிடம் சொல்லி உடனே நடவடிக்கை எடுக்க சொல்ல முசிறிக்கு புதிதாக பொறுப்பெற்றுள்ள தமிழ்மாறன் உடனே மணல் அள்ளிக்கொண்டிருந்த இடத்திற்கு செல்ல அதற்குள்ளாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் மணல் கொள்ளையர்களுக்கு தகவல் சொல்லி 5 லாரிகள் எஸ்கேப் ஆகி 1 லாரி மட்டும் டி.எஸ்.பி. கையில் சிக்கியது.
மணல் கடத்தல் லாரி சிக்கியவுடன் அதை ஓட்டி வந்த ராமராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் மணல் லாரியின் ஓனர் மதுரா சம்பத் வழக்கு பதிவு செய்ய கூடாது என்று எம்.எல்.ஏ. சிபாரிசு செய்து கொண்டியிருக்கிறார்கள். இந்த மணல் மதுராசம்பத் மீது பழைய கலெக்டர் ராசாமணிக்கு தொடர்ச்சியாக மணல் கொள்ளை குறித்து தொடர்ந்து புகார் வந்து கொண்டே இருந்தால் மதுராசம்பத் மீது குண்டாஸ் போடுவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முசியில் உள்ள உள்ளுர் அதிகாரிகள் எல்லோரும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் நிலையில் வெளியூர் அதிகாரிகளிடம் தகவல் சொல்லி தான் உள்ளுர் அதிகாரிகளுக்கு தெரியாமல் மணல் கொள்ளை தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அந்த பகுதிமக்கள்.