ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி ரஜினி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் சிலர் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ரஜினி திட்டவட்டமாக ‘நான் கட்சி ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துவிட்டேன். மேலும் இதுபோன்ற போராட்டங்களை நடத்தி என்னை வேதனைக்குள்ளாக்காதீர்கள்’ என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களின் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதேபோல் வேறு சில நிர்வாகிகள் அ.தி.மு.க.விலும் இணைந்தனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அவர்கள் விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தங்கள் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, அவர்கள் விரும்பும் எந்த கட்சியிலும் இணைந்துகொள்ளலாம். அதேசமயத்தில் அவர்கள் எந்த கட்சியில் இணைந்தாலும் அவர்கள் ரஜினி ரசிகர்கள் என்பதை மறக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.