![trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/C9MLi3Qc_fbmob8M5sbhc4u0e9x_vl9lkO0lviLEY4Q/1589808095/sites/default/files/inline-images/trichy_10.jpg)
கரோனா ஊரடங்கு காலத்தில் திருச்சி மாவட்டத்தில் உயர் அதிகாரி ஒருவர் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைத்துக் கொள்ள, தவறு செய்யும் போலிஸ் மீது நடவடிக்கை எடுத்தால், அதற்கு அடுத்துள்ள அதிகாரி, தப்பு பண்ணும் போலிசாரை விடுவிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார். தற்போது இதுதான் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இடையே ஒரே பேச்சாக உள்ளது.
திருச்சி மத்திய மண்டலத்தில் டி.ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றவுடன் போலிஸ்காரர்கள் மீது வரும் புகார்களை தீவிரமாக விசாரித்து அதிரடியாக நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டார். இவரின் அதிரடியான நடவடிக்கையை பார்த்து பொதுமக்களும் நம்பிக்கையுடன் டி.ஐ.ஜி.யியிடம் புகார்களை கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஆனால் சமீப காலமாக போலீஸ்காரர்கள் மீது வரும் புகார்களை விட, திருச்சி புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் உளவு போலீஸார் மீது பொதுமக்கள் அதிகளவில் புகார் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக் பொறுப்பேற்றவுடன், புதிய எஸ்.பி. இன்பெக்டராக சந்தோஷ்குமார் பொறுப்பேற்றார். எஸ்.பி.க்கு அடுத்து கூடுதல் எஸ்.பி.யாக குணசேகரன் என்பவர் நியமிக்கப்படுகிறார். குணசேகரன் ஏற்கனவே மணப்பாறை பகுதியில் டி.எஸ்.பி.யாக இருந்ததால், திருச்சி மாவட்ட போலீஸ் அனைவரும் இவருக்கு நன்றாக அறிமுகம். இதனால் அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கூடுதல் எஸ்.பி. குணசேகரனிடம் ஒப்படைத்தார். இதற்கு முன்பு, அப்போதைய டிஐஜி பொன்மாணிக்கவேலிடம் சண்டை போட்டுக்கொண்டு, பழனி பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிச் சென்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூடுதல் எஸ்.பி. குணசேகரனோ, எஸ்.பி. இன்ஸ்பெக்டர். சந்தோஷ்குமாரை தவிர்த்து விட்டு, அதே அலுவலத்தில் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருக்கும் கமலவேணி என்பவரிடமே தகவல்களை சொல்லி மேற்பார்வை பார்க்கிறார்.
இது சம்மந்தமான புகார்கள் டிஐஜி வரை சென்றது. உடனே கோபமான டிஐஜி, எஸ்.பியிடம் இது குறித்து பேசுகிறார். உயர் அதிகாரிகள் இடையே நடக்கும் பிரச்சனையில் எங்கே தனக்கு எதுவும் பிரச்சனை ஆகிடுமே எனப் பயந்துபோன இன்ஸ்பெக்டர். கமலவேணி புதுக்கோட்டைக்கு டிரான்ஸ்பர் வாங்கிச் சென்று விடுகிறார்.
இன்ஸ்பெக்டர் கமலவேணி டிரான்பர் ஆகி சென்றவுடன், திருச்சி மாவட்ட எஸ்.பி., ஏட்டுகள் அனைவரும் நேரடியாக கூடுதல் எஸ்.பி குணசேகரனிடம் ரிப்போர்ட் செய்கிறார்கள். அதனால் வழக்கம்போல் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் டம்மியாகவே இருக்கிறார்.
![tttt](http://image.nakkheeran.in/cdn/farfuture/2x0OERJYItcts4me0LBuby-qUOT5Vmw-RJggiQI_Ml0/1589808064/sites/default/files/inline-images/2221111.jpg)
இந்த நிலையில் தான் டிஐஜி பாலகிருஷ்ணனிடம், திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. ஏட்டுகள் பற்றி தொடர்ந்து புகார் மனுக்கள் வர ஆரம்பித்திருக்கிறது.
சமீபத்தில் 45 நாளைக்கு முன்பு, வையம்பட்டி வி.ஏ.ஓ., கடத்தல் மணல் வண்டியை பிடித்து வையம்பட்டி ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். அங்கே கடந்த 11 வருடமாக ஸ்பெஷல் ப்ரான்ச் (branch) ஏட்டு எஸ்.எஸ்.ஐ. பிரான்சிஸ், அந்த வி.ஏ.ஓ.விடம், “இதெல்லாம் ஒரு பிரச்சனையா, நான் பணம் வாங்கித் தருகிறேன், புகாரை வாபஸ் வாங்கு” என்று டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார். காரணம் ஸ்பெஷல் ப்ரான்ச் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. பிரான்சிஸ்க்கு அவர் வேலைபார்க்கும் கருங்குளம்தான் சொந்த ஊர். சொந்த ஏரியாவில் உளவு ஏட்டு யாரும் வேலை செய்யக்கூடாது என்பது விதி. ஆனாலும் மேலிட செல்வாக்குடன் அதே இடத்தில் வேலை செய்து, அந்த ஏரியாவில் பிரமாண்டமான வீடு கட்டியுள்ளார். மேலும் நிறையபேரிடம் லஞ்சம் பெற்றும் வருகிறார்.
இதற்கு இடையே மணல் வண்டி பிரச்சனை வருவாய்துறையினர் மூலம் டிஐஜியின் கவனத்திற்கு செல்கிறது. உடனே விசாரணை செய்து ஸ்பெஷல் ப்ரான்ச் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. பிரான்சியை உடனே ஜீயபுரம் ஸ்டேஷனில், சட்ட ஒழுங்கு பிரிவிற்கு டிரான்ஸ்பர் பண்ணுகிறார்.
அடுத்த 2 நாட்களில் கூடுதல் எஸ்.பி. குணசேகரனை பார்த்து, உடம்பு சரியில்லை என்று காரணம் காட்டி, அவரை சரி பண்ணி – ஜீயபுரம் – கணக்கில் வேலை பார்த்துக்கொண்டு, ஓடி (O.D.) கணக்கில் மணப்பாறை புத்தாநத்தம் ஸ்டேனில் வேலை செய்கிறார். இந்த விஷயம் இதுவரை டிஐஜி கவனத்திற்கு செல்லாமல் கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள், சம்பந்தப்பட்டவர்கள்.
![nakkheeran app](http://image.nakkheeran.in/cdn/farfuture/eB7h6JSMzQkzegIY3CTEiWMtL6ZL_o_GG3BTnimm0kk/1589809427/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_370.gif)
இதேபோன்று இன்னொரு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. புத்தாநத்தம் – எஸ்.பி. ஏட்டு ஃபெடரிக் ஏற்கனவே லால்குடி – கஞ்சா பிரச்சனையினால்தான், அங்கிருந்து டிரான்ஸ்பரில் இங்கு வந்தார். மணப்பாறை லாக்கப் மரணம் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியவர். இவர் மீது புகார் மனு நிறைய வரவும், அதை விசாரணை செய்த டிஐஜி பாலகிருஷ்ணன், அவரை ஆயுதப்படைக்கு டிரான்ஸ்பர் செய்கிறார். அடுத்த இரண்டு நாளில் கூடுதல் எஸ்.பி. குணசேகரனை சந்தித்து சரிகட்டி மணப்பாறை காவல்நிலையத்திலேயே பணியமர்த்தபடுகிறார்.
டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் வரும் புகார்களை நேர்மையான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தால், எஸ்.பி. ஜியாவுல் ஹக் கவனத்திற்கே தெரியாமல், கூடுதல் எஸ்.பி குணசேகரன் தண்டனை பெற்றவர்களை அடுத்த சில நாட்களிலேயே விடுவித்து, மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றிவிடுவதன் மூலம் தவறு செய்யும் அதிகாரிகள் மீது புகார் கொடுக்கவே மக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இப்படி உயர் அதிகாரிகள் இடையே நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தெரிந்த, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட உளவுப்பிரிவு டி.எஸ்.பி, சுதர்ஷன், இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நமக்கு ஏன் வம்பு என தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.