தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கலை, விளையாட்டு, இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்படங்கள் திரையிடல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றின் கீழ் ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 2022-2023 தமிழகம் முழுவதும் 6 வகையான செயல்பாடுகளில் 150 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வழி நடத்திட 30 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 6 மாணவ,மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் கலை பிரிவில் குழுமணி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி நட்சத்திரா, சிறார் திரைப்படங்கள் திரையிடலில் பன்னன்கொம்பு அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீவர்சன், எடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி மித்ரா, இலக்கிய மன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட மண்ணச்சநல்லூர் பெண்கள் நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி கலை பிரியா, விளையாட்டில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவன் பிரசன்னன், வானவில் மன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட எசனகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் தாரேஷ் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் சிறுகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தீபா உள்ளிட்டவர்கள் இந்த கல்விச் சுற்றுலாவில் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளதால், தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ,மாணவிகளுக்கான உரிய ஒப்புதல் கடிதங்கள் மற்றும் அவர்களுக்கான கடவுச்சீட்டுகள் அனைத்தும் கடந்த 13 ஆம் தேதிக்குள் பெறப்பட்டுத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலா செல்வதற்கான தேதி இதுவரை குறிப்பிடப்படாமல் உள்ளது. விரைவில் சுற்றுலா செல்வதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.