Skip to main content

திருச்சி மாநகராட்சி தூய்மை தூதுவராக ”டைரி” சகா தேர்வு!

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
திருச்சி மாநகராட்சி தூய்மை தூதுவராக ”டைரி” சகா தேர்வு!

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தூய்மை நகர கணப்பெடுப்பு பட்டியலில் திருச்சி மாநகராட்சிக்கு முதலாம் ஆண்டு 3ம் இடமும் இரண்டாம் ஆண்டு 6வது நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்தியாவின் தூய்மை நகர போட்டிக்கான தோ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

திருச்சி மாநகர் முதல் இடத்தை பிடிப்பதற்காக முயற்சியில் தீவிரமாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். இதற்கான வழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு திருச்சியில் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 4 கோட்டங்களின் கீழ் நடைபெற்று வருகிறது. 

திருச்சி பொன்மலை கோட்டத்தின் சார்பில் தூதுவராக திருச்சி ஹலோ பண்பலையின் நிலைய மேலாளாரும் தமிழகத்தில் பிரபலமான டைரி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ” சகா ” என்கிற சண்முகநாதனை நியமித்து அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் அதற்கான நினைவு பரிசை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் வழங்கினார்.



நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் பேசும் போது.. 

தூய்மை இந்தியா நகர பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்கு நமக்கு 4000 ஆயிரம் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 4,000 மதிப்பெண்களை பெற்றால் தான் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற முடியும். இதற்கான ஆய்வு வருகிற ஜனவரி மாத முதல் ஆரம்பமாகும். அதற்கு முன்பாக பொதுமக்கள், மாணவர்கள், குடியிருப்போர் நகர் நல நிர்வாகிகள் ஆகியோரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பது விழிப்புணர்வு ஏற்படுத்த தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை ஒருங்கிணைத்து தூய்மை இந்தியா கமிட்டி அமைக்க வேண்டும். அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்காக பள்ளி மாணவ மாணவியர் இடையே கவிதை, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் 

சுகாதாரம் சம்மந்தமான 6 கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்தால் நாம் தான் முதலிடத்தை பெற முடியும் என்று பேசினார். 



தூய்மை தூதுவர் ”டைரி சகா” பேசும் போது.. 

வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு சுயமுற்சி, மற்றும் பய முயற்சி என இரண்டு வகையான வழிகள் இருக்கிறது. சுயமுயற்சி என்பது தானாகவே லட்சியத்தை அடைய பயன்படுகிறது. அடுத்து பய முயற்சி என்பது மற்றவர்களுக்கு பயந்து உழைக்க முற்படுவது. 

தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியில் தூய்மை நகர பட்டியலில் முதல் இடத்தை பெறுவதற்கு நாம் அனைவரும் சுய முயற்சியோடு மாநகராட்சியுடன் இணைந்து போர் வீரர்கள் போல் செயல்பட வேண்டும். 
ஸ்ரீரங்கம் கோட்டத்தின் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கான சதுரங்க போட்டியின் சாம்பியன் வீராங்கனை ஜெனிபர் ஆன்டோவை தூய்மை தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 

இந்த நிகழ்ச்சியில் நகர பொறியாளர் அமுதவள்ளி செயற்பொறியாளர்கள் குமரேசன், செல்வம், கண்ணன், உதவி ஆணையர்கள் தயாநிதி, பிரபாகரன், மிகாவேல், ஞான தீபன் மற்றும் உதவி பொறியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

- ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்