'ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில் மற்றவர்களின் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் சன்னியாசி நிலை?'என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னுடைய இரண்டு மகள்களையும் ஈஷா யோகா மையத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சம்பந்தப்பட்ட மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையின் பொழுது பெற்றோர்கள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக மகள்கள் கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'நீங்களே முற்றும் துறந்த ஞானிகள் ஆன பின் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஜக்கி வாசுதேவ் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இவர்களுக்கு ஏன் சன்னியாசி நிலை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. ஆனால் பல சந்தேகங்கள் உள்ளது' என ஐயப்பாடை தெரிவித்தனர். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பி நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை தர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.