குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
லேகா என்ற பெண்ணுடைய வழக்கு இது. பி.இ படித்து முடித்து எம்.இ படிப்பதற்காக தயாராக இருந்த இந்த பெண்ணுக்கு, ஒரு வரன் வருகிறது. பெங்களூரில் வேலை பார்க்கும் பையனுக்கும், லேகாவுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. நிச்சயமான பிறகு, லேகா அந்த பையனுக்கு போன் போட்டு பேசினாலும், அந்த பையன் ஆர்வம் காட்ட மாட்டிக்கிறான். இருப்பினும், லேகாவுக்கு 50 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் நடந்த அன்று, கூட அந்த பையன் எந்தவித ஆர்வமும் காட்டாமல் அமைதியாக இருக்கிறான். அதில், லேகாவுக்கு சிறிய ஏமாற்றம் ஏற்படுகிறது.
திருமணம் நடந்து 2,3 நாட்கள் கழித்து லேகாவை மாப்பிள்ளை இருக்கும் பெங்களூருக்கு லேகாவினுடைய அப்பா அழைத்துச் செல்கிறார். ஆனால், பையனுடைய அண்ணன் கேட்டுக்கொண்டதன் பேரில் புதுமண தம்பதிகளை, அண்ணனுடைய வீட்டிலே தங்க வைத்து லேகாவினுடைய அப்பா திரும்பி வந்துவிடுகிறார். அவர்கள் போன பிறகு, வீடே அமைதியாக இருக்கிறது. கணவன், தன்னுடன் பேசமாட்டிக்கிறான் என்பதை பற்றி அண்ணியிடம் லேகா கேட்டாலும் பையன் கூச்ச சுபாவம் என்று சமாளித்துவிடுகிறார். அன்று இரவு, பையன் வீட்டுக்கு வராமல் ஆபிஸில் வேலை இருப்பதாக லேகாவிடம் சொல்லிவிடுகிறான். 2,3 நாட்களாக பையன் வீட்டுக்கு வராமல் இருந்ததால், இவர்களுக்குள் தாம்பத்திய உறவே நடக்கவில்லை.
இவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் இருக்க முடிவு செய்துவிட்டு, வீடு பிடித்து வாடகை எல்லாம் கொடுத்தாலும், சமையல் வேலைகளை கற்றுக்கொள்வதற்காக அண்ணியிடமே சில காலம் லேகாவை இருக்க சொல்கிறான். அதன் பேரில், அவளும் அண்ணியிடம் 1 மாத காலம் வரை இருக்கிறாள். அதுவரை பையன் இந்த வீட்டுக்கும் வராமலும், தனிக்குடித்தனம் செல்வதற்கு வராமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் மனமுடைந்த லேகா, தனிக்குடித்தனம் செல்வதற்காக வாடகைக்கு எடுத்த வீட்டுக்குச் செல்லும் போது அங்கு அந்த பையன் மட்டுமே இருக்கிறான். லேகா வற்புறுத்தலின் பேரில், அவளும் இந்த வீட்டுக்கு எல்லாப் பொருள்களை எடுத்துக் கொண்டு வருகிறாள். ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் போது ஏற்படும் எந்தவித கிளர்ச்சியும் அவனிடம் இல்லை. இதைப் பற்றி அவனிடம் கேட்டால், இந்த திருமணத்தின் மீது தனக்கு விருப்பமில்லை என்கிறான். உடனே, லேகா அவளுடைய அப்பாவுக்கு போன் போட்டு மனோதத்துவ டாக்டரை பார்க்க வேண்டும் என்று கூறி பணம் கேட்டதற்கு அவரும் பணத்தை அனுப்பிவிடுகிறார். இதையடுத்து இந்த பெண், ஒரு சைகாட்ரிஸ்ட் டாக்டரின் முகவரியை கண்டுபிடித்து கணவரை அழைத்தாலும் அவன் வரமறுத்து கொஞ்சம் டைம் கேட்கிறான். இவளும் டைம் கொடுத்த பின்னால், இரண்டு மாதங்கள் கழிந்தாலும், இவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை.
அதன் பின், லேகா வற்புறுத்தலின் பேரில் சைகாட்ரிஸ்ட் டாக்டரை பார்க்க சம்மதித்து புக் செய்கிறார்கள். சைகாட்ரிஸ்ட் டாக்டரை பார்ப்பதற்கு தயாராக இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இந்த பையன் வீட்டுக்கே வரவில்லை. அந்த பையனுடைய அண்ணுனுக்கு போன் போட்டு கேட்டாலும், அவன் அங்கும் செல்லவில்லை எனத் தெரிகிறது. பையனுடைய நண்பர்களுக்கெல்லாம், லேகா போன் போட்டு கேட்டாலும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மொழி பாசை தெரியாததாலும், தனியாக இருந்ததாலும் பயத்தோடு ஒரு மாதம் வரை வீட்டில் தனியாக இருக்கிறாள். அதுவரை அந்த பையன் வராமலே இருக்கிறான். அதன் பின்பு, தன்னுடைய அப்பாவுக்கு போன் போட்டு நடந்த விவரத்தைச் சொல்லி சொந்த ஊரான சென்னைக்கு வந்துவிடுகிறாள். பையன் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், அப்பாவும் மகளும் சேர்ந்து கர்நாடகாவுக்குச் சென்று பான்யன் ஆர்கனிஷேசனில் என்ற அசோஷியேசனில் நடந்த விவரத்தைச் சொல்லி புகார் கொடுக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்து மனமுடைந்த பின்னால் இங்கு சென்னைக்கு வந்துவிடுகிறார்கள்.
இந்த நிலையில், தான் என்னை பார்த்து விஷயத்தைச் சொல்கிறார்கள். பையனையும் மகளையும் சேர்த்து வைக்க லேகாவினுடைய அப்பா விரும்பினார். பையன் எங்கு இருக்கிறான் என்பது தெரியாததால், வீட்டு வாடகைக்காக போடப்பட்டிருக்கும் கான்டிராக்டை வைத்து அந்த அட்ரஸிற்கு தெரிந்தே நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸ் திரும்பி வந்ததால், பையனுடைய அண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதன் பின், குடும்ப நீதிமன்றத்தில் சேர்ந்து வாழ்வதற்கு மனு ஒன்றை போட்டோம். ஒருவர் காரணமில்லாமல் தாம்பத்திய உறவு கொண்டு வாழவில்லை என்று சொன்னால், சட்டப்படி திருமணமான மனைவி அந்த உரிமையை கேட்டு மனுவை போடலாம். அந்த அடிப்படையில் சேர்ந்து வாழ்வதற்கு மனு போட்டோம். அதன் பின்பு, கர்நாடகாவில் உள்ள அந்த பான்யன் ஆர்கனிஷேனில் கேட்டோம். அவர்களும் நிறையவே தேடினார்கள். ஆனால், கிடைக்கவில்லை. அந்த பையன் வரவில்லை என்றால், கோர்ட்டில் ஒருதலைபட்சமாக நமக்கு தீர்ப்பு சாதகமாகிவிடும். ஆனால், இந்த விஷயத்தில் லேகாவினுடைய அப்பா திருமணத்திற்காக நிறைய செலவு செய்திருப்பதால், பெர்மனண்ட் அலிமோனி ( வாழ்நாள் ஜீவனாம்சம்) 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற கேஸை போட்டோம்.
இந்த கேஸை போட்ட பிறகு தான் அந்த பையன் கோர்ட்டுக்கு வந்தான். இவ்வளவு நாள் நடந்த சம்பவங்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டிருந்த அந்த பையன், பணம் கேட்டபிறகு அவன் வந்துவிட்டான். கவுன்சிலிங்கில் அவனிடம் எவ்வளவு பேசினாலும், தன்னால் திருமண உறவு கொண்டு வாழ முடியாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான். திருமணம் ஆன செலவிற்காக 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அவனால் 6 லட்சம் தான் கொடுக்க முடியும் என்று சொன்னான். அதன் பிறகு, லேகாவினுடைய அப்பாவிடம் இதற்கு சம்மதம் கேட்டு அவனிடம் இருந்து அந்த 6 லட்சத்தை வாங்கிக் கொடுத்தேன். இப்போது அந்த பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடந்து சந்தோஷமாக இருக்கிறாள்.