ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முதற்கட்டமாக செப்டம்பர் 18ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (01-10-24) நடைபெறவுள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்தத் தேர்தலில் மெகபூபா முப்தியின் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் புதிதாக ஆரம்பித்த ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சாம்ஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம், பாந்தரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகப் போட்டியிடுகின்றன. 9 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் வெற்று பெறுவதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே லேசாக சரிய தொடங்கினார். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், உடனே ஓடி வந்து மல்லிகார்ஜுன கார்கேவை தாங்கி பிடித்தனர். அதன் பின்னர், அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.
சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மல்லிகார்ஜு கார்கே மீண்டும் பேச தொடங்கினார். அப்போதுஅவர், “மாநில அந்தஸ்தை மீட்க போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறக்கப் போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.