மதுவிலக்கு மாநாட்டை அறிவித்துள்ள விசிக அதற்கான தீவிர பணிகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள இடத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் இந்தியா முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மதுவிலக்கு வேண்டும் என அனைவரும் தீர்மானம் போட்டால் மதுவிலக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திருமாவளவன், 'இது ஒரு நல்ல ஆலோசனை. ஊராட்சி மன்ற தலைவர்கள் அந்தந்த ஊராட்சிகளில் மதுவிலக்கு தொடர்பான தீர்மானங்களை ஏற்ற வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுகிறேன். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கூடிய ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் எங்களின் வேட்கை எங்களுடைய கோரிக்கை. இது தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து கட்டாயமாக கொடுப்போம். பிரதமரை சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக அமைச்சரை சந்தித்து எங்களுடைய கட்சியின் சார்பில் கோரிக்கை மனு தருவோம்'' என்றார்.