Skip to main content

ஒரே நாடு ஒரே தேர்தல்; 3 சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டம்!

Published on 30/09/2024 | Edited on 30/09/2024
Central Government implement to one nation one election scheme

பாஜகவின் கனவுத் திட்டமான ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை  ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழு ஒன்றை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த குழு 191 நாட்களில் 65 கூட்டங்களை நடத்தி பொதுமக்கள் அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டது. இப்படியாக மொத்தம் 21,588 கருத்துகள் பெறப்பட்ட நிலையில், 80 சதவீத கருத்துகள் ஒரே நாடு  ஒரே தேர்தலுக்கு ஆதரவாக இருந்துள்ளது. 47 அரசியல் கட்சிகளில் 32 அரசியல் கட்சிகள் ஆதரவாகவும், 15 அரசியல் கட்சிகள் எதிராகவும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து,  ஓரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம்  ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் வழங்கியது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு அந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, ‘நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன் முடிவுகள் வெளியான 100 நாட்களில் நகராட்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும். மேலும், 3 தேர்தல்களுமே ஒரே வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடைபெற வேண்டும்’ என்பது இந்த அறிக்கையின் சாரம்சம்.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு, மூன்று சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலாவது சட்டமாக, மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டமாக இருக்கும். இரண்டாவது சட்டமானது, உள்ளாட்சித் தேர்தல்களை மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த மசோதா, மாநிலங்களின் நிர்வாகம் தொடர்பானது என்பதால், 50% மாநில சட்டசபைகளில் ஒப்புதல் பெற வேண்டும். .

அதனை தொடர்ந்து, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர், டெல்லி ஆகிய யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கான பதவிக்காலத்தை மற்ற சட்டப்பேரவை பதவிக்காலத்துடன் ஒத்திருக்கும்படி மாற்ற இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, மூன்றாவது சட்டமாக இருக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்