இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை பழம் பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் 54வது தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 நடக்கவுள்ள தேசிய விருது வழங்கும் விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
மேற்கு வங்கலத்தை சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி, இந்தி மற்றும் பெங்காலி மொழியில் ஏராளமான படங்களில் நடித்து வந்தவர். மேலும் ஒரிசா, போஜ்புரி, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தியுள்ளார். அதோடு தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார். தான் நடித்த முதல் படத்திலே(ம்ரியகயா) சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கியவர். பின்பு ‘தாகதே கதா’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் ‘சுவாமி விவேகானந்தா’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கியுள்ளார். திரைத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி இந்தாண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
திரைத்துறையை தாண்டி அரசியலிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். 2014ஆம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பி.-யாக இருந்துள்ளார். பின்பு 2016ஆம் ஆண்டு அந்த பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். பின்பு 2021ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து தற்போது வரை அதில் பயணித்து வருகிறார். இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்