திருச்சி மாவட்டம் கூகூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வரும் 16 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். அதன் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எஸ்பி சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன், நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி இயக்குநர் சுரங்கம் மற்றும் புவியியல் துறை பாலமுருகன், லால்குடி நகராட்சி ஆணையர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கு தாக்கல் செய்த சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் காரில் ஏறி புறப்பட முயன்றனர். அப்போது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திடீரென ஆட்சியர் மற்றும் எஸ்பியின் காரை முற்றுகையிட்டு, குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்கு வந்த போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது, ஆட்சியர் பிரதீப்குமார் தலையிட்டு குவாரிகளில் ஆய்வு நடத்தி உள்ளதாகவும், அதன் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்திற்கும் பொதுமக்களின் பார்வைக்கும் வெளியிடுவேன் என உறுதி அளித்தார். அதனை ஏற்று பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.