Skip to main content

அதிநவீன சிக்னல்களின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்த காவல் ஆணையர்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

trichy city police commissioner sathyapriya new technology signal open ceremony

 

திருச்சியில் போக்குவரத்து வாகனங்கள் இடையூறின்றி செல்ல ANPR கேமரா மற்றும் சிசிடிவி கேமராக்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கப்பட்டது.

 

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, இ.கா.ப., திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

 

திருச்சி மாநகரில் அடிக்கடி விபத்து நடக்கக் கூடியதாகக் கண்டறியப்பட்ட 31 இடங்களில் (Hotspots) 10 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி நகரும் 31 இடங்களில் அடங்கும். இது தவிர சஞ்சீவி நகர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் என்பதைக் கண்டறிந்து இதைச் சீர் செய்யும் பொருட்டும், விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும் வாகன எண்களைக் கண்டறியும் உயர் ரக தானியங்கி ANPR கேமராக்கள் - 2, கண்காணிப்பு  கேமராக்கள் - 6 மற்றும் ஒலிபெருக்கிகளுடன் கூடிய பொது விளம்புகை அமைப்பு (PA System) ஆகிய அம்சங்களுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னலை திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியபிரியா, இ.கா.ப., நேற்று  (24.05.2023) காலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். இதுபோன்று திருச்சி மாநகரத்தில் குற்றம் நடக்காமல் தடுக்க அதிக அளவில் கேமராக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 

trichy city police commissioner sathyapriya new technology signal open ceremony

இந்த விழாவில் காவல் துணை ஆணையர்(வடக்கு), மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை ஆணையர், ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர், போக்குவரத்து காவல் உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் கலந்து கொண்டார்கள். இவ்விழா முடிந்த பின்னர் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் நீர் மோர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள். மேலும் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கும் நீர் மோர் வழங்கினார்.

 

trichy city police commissioner sathyapriya new technology signal open ceremony

திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூறின்றி சீராக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து சிக்னல் ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.