திருச்சி ஏர்போர்ட், காவேரி நகர் பகுதியிலுள்ள காலி மனையில் இருந்து இன்று (23.02.2021) விடியற்காலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் இதுகுறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஜெயக்குமார். காலி மனையில் உள்ள குப்பை கழிவுகள் மத்தியில் இருந்த சாக்குப் பையில் இருந்து, குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து அருகில் சென்று பார்த்தபோது, அந்தச் சாக்குப் பையில் பிறந்து சிலமணி நேரங்களேயான, தொப்புள் கொடியுடன், பச்சிளம் பெண் குழந்தை இருந்ததைக் கண்டு போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, முதலுதவி கொடுக்கப்பட்ட பிறகு அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஏழுமாத குறை பிரசவத்தில் தொப்புள் கொடியுடன் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை என்பதால் தூக்கி வீசபட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரக்கமற்ற செயலாக இப்படி குப்பை தொட்டியில், அதிலும் காற்று நுழையாத சாக்குப்பையில் வைத்து, வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.