திருச்சியிலிருந்து பன்னாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வரும் சிலர் தங்கம் கடத்தி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கிவருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (27.10.2021) இரவு துபாய், சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். அதில் இரண்டு பயணிகளிடமிருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பயணியை சோதனை செய்ததில், அவரது உடலில் பேஸ்ட் வடிவில் மறைத்து கொண்டுவரப்பட்ட 42.30 லட்சம் மதிப்பிலான 869.500 கிராம் தங்கமும், மற்றொரு பயணியிடமிருந்து, எலக்ட்ரானிக் தராசில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 34.50 லட்சம் மதிப்பிலான 709.500 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு பயணிகளிடமிருந்தும் மொத்தம் 1,579 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 76.80 லட்சம் என்று அதிகாரிகள் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.