மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு நாளை சென்னை அப்பல்லோவில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. கடந்த 2016ம் ஆண்டின் போது நடைபெற்ற விபத்தில் வலது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. இந்த கம்பியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
2016ம் ஆண்டில் சபாஷ் நாயுடு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன், எடுத்த காட்சிகளின் எடிட்டிங் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த சூழ்நிலையில், நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடிப் படிகளில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். இதனால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
அந்த அறுவை சிகிச்சையின்போது காலில் பொருத்தப்பட்ட கம்பியை அகற்றுவதற்காகத்தான் நாளை அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வு எடுக்கவிருக்கிறார். ஓய்வுக்கு பின்னரே கமல்ஹாசன் கட்சியினரை சந்திக்கிறார், மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.