சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் அப்பகுதியில் உள்ள இருளர் பழங்குடியின மாணவர்கள் 23 பேர் கல்வி கற்க புதிதாக இணைந்துள்ளனர்.
கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் அவர்களுக்கு மாலை, தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டு ஒரு வண்டியில் அமர வைத்து ஒலிபெருக்கி மூலம் கல்வி குறித்தும், கல்வி கற்றால் என்ன நன்மை கிடைக்கும் எனவும் இருளர் பழங்குடியின சமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புதியதாகக் கல்வி கற்க வந்த அனைத்து மாணவர்களையும் வரவேற்கும் விதமாக கை தட்டி வாழ்த்து கூறி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குமரவேல், பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகர், கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் சூர்யா, கிராம தலைவர் செஞ்சி சின்னமணி, சத்தியமூர்த்தி, செல்லதுரை, கோதண்டபாணி மற்றும் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.