திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (20.12.2024) காலை கீழநத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கொடூரமான முறையில் முகம் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டி படுகொலை செய்துவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் தேடப்படும் மொத்த குற்றவாளிகளில் ஆறு பேரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மீதம் ஒரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்தச் சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசிற்கும் பல்வேறு கேள்விகளை முன் வைத்திருந்தது. குறிப்பாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொலை சம்பவம் நடந்த இடத்தில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்பொழுது ஒரே ஒரு சிறப்பு ஆய்வாளர் மற்றும் கொலை செய்த நபரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மற்ற போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர்? சம்பவத்தின் போது இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்திருக்கின்றனர். எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பதை விட சம்பவம் நடந்த இடம் தான் கவலை அளிக்கிறது. நீதிமன்ற வளாகத்திலேயே இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் சாட்சியங்கள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள் என கண்டனத்துடன் வேதனை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் 'அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். காவலர்கள் தங்களுடைய தற்காப்பிற்காக துப்பாக்கியை வைத்துக் கொள்ள வேண்டும். பிஸ்டல் மட்டும் நீண்ட ரேஞ் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் வரும். 23ஆம் தேதிக்குள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.