புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்பட பல மாவட்டங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதைக் கலையாகவும், கலாச்சாரமாகவும் கொண்டுள்ளனர் இளைஞர்களும், விவசாயிகளும்.
இப்படி வளர்க்கப்பட்ட கோடிக்கணக்கான மரங்கள் கஜா புயலில் சில மணி நேரத்தில் வேரோடு சாய்ந்து தரையோடு கிடந்தது. இதைப் பார்த்து சில நாட்கள் கண்ணீர் வடித்தாலும் அடுத்த நிமிடமே இதே போன்று பல மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு கிடைத்த இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர். பேராவூரணி உள்பட பல இடங்களில் நீர்நிலைகளுக்கு மத்தியில் குருங்காடுகளையும் அமைத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கைஃபா, திருவாரூரில் கிரீன் நீடா, புதுக்கோட்டையில் மரம் அறக்கட்டளை, கொத்தமங்கலம், மறமடக்கி இளைஞர் மன்றங்கள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் பல இயக்கங்கள் அமைப்புகள் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
மற்றொரு பக்கம் தஞ்சை மாவட்டம், பேராவூரணி தொகுதியில் உள்ள நாடியம் கடற்கரையில் சுமார் 18 ஏக்கரில் சீமை கருவேல மரங்களை அழித்துவிட்டு கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களின் பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணிகளை கைஃபா அமைப்பினர் முன்னெடுக்க, முதல் கன்றை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நட்டு தொடங்கி வைத்துள்ளார்.
ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் பொது இடத்தில் தனி ஒருவர் சுமார் 1000 மரக்கன்றுகள் நட்டு தினசரி தண்ணீர் தூக்கி ஊற்றி சுமார் 500 கன்றுகளை மரங்களாக வளர்த்திருக்கிறார்.
அந்த இளைஞரை சந்தித்த போது, "நான் ரமேஷ்.. கஜா புயலுக்கு முன்பு நின்ற மரங்கள் சாய்ந்த போது பல நாள் வருத்தமாக இருந்தேன். அதன் பிறகு முடிவெடுத்து பசுமை புரட்சி என்ற பெயரோடு கொத்தமங்கலம் அய்யனார் கோயில் வளாகத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய பரப்பளவுள்ள குளத்தைத் தேர்வு செய்து எந்த இயற்கை சீற்றத்தாலும் சாய்க்க முடியாதபடி ஆழமாக குழி வெட்டி மரக்கன்றுகளை நடத் தொடங்கினேன்.
அப்துல் கலாம் முதல் தேசிய, மாநில தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் உள்ளூரில் நடக்கும் திருமணங்கள், பிறந்த நாள்களை கொண்டாடுவோரை மரக்கன்று வைக்கச் சொல்லி வலியுறுத்தி அவர்கள் நடும் கன்றுகளையும் நானே தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறேன். பலர் கிண்டல் செய்வார்கள், சிலர் கன்றுகளை பிடிங்கி வீசுவார்கள், ஆடுமாடுகள் கன்றுகளை தின்றுவிடும். அத்தனையும் தாங்கிக் கொண்டு சொந்த செலவிலேயே கூண்டு அமைத்து குளத்தில் தண்ணீர் எடுத்து சைக்கிளில் கொண்டு போய் ஒரு நாளைக்கு 200 குடம் தண்ணீர் ஊற்றுவேன். சுழற்சி முறையில் தண்ணீர் ஊற்றி குழந்தைகளைப் போல பாதுகாப்பேன். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால் விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி 1000 கன்றுகளில் 500 மரங்களை உருவாக்கிவிட்டேன்.
இப்போது நம்மிடமிருந்து அழிந்துவரும் பலவகையான மரக்கன்றுகளை தேடிப் போய் வாங்கி வந்து நடுகிறேன். எல்லாமே என் செலவு தான். பல நேரம் குளத்தில் தண்ணீர் இல்லாத போது ஒரு நாளைக்கு 3 டேங்கர் வீதம் வாரத்திற்கு ஒரு முறை பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி கன்றுகளுக்கு ஊற்றுவேன். ஒரு டேங்கர் ரூ 700 விலை கொடுத்து வாங்கி வந்தேன்.
ஜூன் 3- ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளுக்கு மரக்கன்று நட்டோம். அதன் பிறகு தகவல் தெரிந்து வந்த சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகள் மரமாக வளர்ந்து நிற்பதைப் பார்த்து பாராட்டியதோடு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். மரக்கன்றுகளுக்கு ஊற்ற தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறேன். அதனால் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுத்தால் போதும் என்று கேட்டேன். உடனே ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆழ்குழாய் கிணறு கிடைத்துவிட்டால் இங்கு சுமார் 75 ஏக்கரில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் குருங்காட்டை உருவாக்கிவிடுவேன்" என்றார்.