சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகமான புஹாரி உணவகத்தில் சாப்பிட்ட சிலர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது வரை எட்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு நடத்தினர்.
காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மணிமாறன் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், குளிர்சாதன பெட்டியில் இருந்து கெட்டுப்போன சிக்கன், மட்டன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குளிர்சாதன பெட்டியில் உள்ளே கருப்பு பாலீத்தின் கவர்கள் போட்டு அழுகிப்போன இறைச்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கவரை தூக்கிய போது அதிலிருந்து கரப்பான் பூச்சி ஓடுவதைக் கண்டு கடை உரிமையாளரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும், அங்கு சமைக்கப்பட்ட உணவுகளை சேகரித்து ஆய்வுக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு ஹோட்டல் நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்றனர்.