பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட பயணிகள் கூட்டத்தால் எழும்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் ஏறுவதற்கு பயணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் முத்துநகர் விரைவு வண்டி, கன்னியாகுமரி விரைவு வண்டி, பொதிகை விரைவு வண்டி, நெல்லை விரைவு வண்டி உள்ளிட்ட ரயில்களில் எற கூட்டம் அலைமோதியது. டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பயணிகள் இது போன்ற பண்டிகை நாட்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரயில்களில் மட்டுமின்றி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையிலிருந்து சென்றுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக கடந்த இரண்டு நாட்களில் 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
ஆம்னி பேருந்துகள் 861 பேருந்துகள் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இதுவரை அபராத கட்டணமாக 18 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. வரி வசூல் 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செய்யப்பட்டிருக்கிறது. 11 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் விடப்படுவதால் கூட்ட நெரிசல் சற்று குறைவாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.