கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து தமிழ்நாடு விவசாய சங்க கடலூர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையம் சென்றனர். அங்கு சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து மறியல் செய்தனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்க தமிழ்ஒளி, நகர செயலாளர் ஆதிமூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநில நிர்வாகி மணிவாசகம், மாவட்ட நிர்வாகிகள் சேகர், தமீம்முன் அன்சாரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சிதம்பரம் நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா , மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.