கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபரை பிடித்த பெண் தலைமை காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி உள்ளார். இதனால் அலறித் துடித்த இளம்பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற வாலிபரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மடக்கிப் பிடித்து கோவை மாநகர போலீசில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து, எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணும் இவரும் கணவன், மனைவி எனத் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பெண் தலைமை காவலர் இந்துமதி திறம்பட செயல்பட்டு ஆசிட் வீச்சில் ஈடுபட்ட வாலிபரை பிடித்தார். இதனைத் தொடர்ந்து பெண் தலைமை காவலர் இந்துமதியை கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் நேரில் அழைத்துப் பாராட்டி பரிசு வழங்கினார்.