கஜா புயலால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் பாதிப்புகள் குறித்து முதல்வர் நாராயணசாமி நேற்று அமைச்சர்களுடன் காரைக்கால் சென்று பார்வையிட்டு பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ’’கஜா புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் மீனவர் வசிக்கும் பகுதிகளில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக மீனவர்களின் படகு மற்றும் வலைகள் சேதமடைந்துள்ளன.
புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காரைக்கால் மாவட்டத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். புயல் பதிப்புகள் குறித்த அறிக்கையினை மத்திய அரசுக்கு வரும் திங்கட்கிழமை அன்று அனுப்ப உள்ளோம்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட காரைக்காலில் 70% பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.’’