1971-இல் இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 41.5 டன் எடை கொண்ட 55டி விஜயந்தா ராணுவ பீரங்கி, 2 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை குறிபார்த்து தாக்கி வீழ்த்தக் கூடியது. ராணுவத்தில் சேர்வதற்கு ஆர்வமாக உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்திய ராணுவம் குறித்து பலரும் அறிந்து கொள்வதற்காகவும், இந்த பீரங்கி இங்கு நிறுவப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறுகின்றனர். ஆனாலும் பசுமைச்சாலை எதிர்ப்பு போராட்டம் வலுத்துவரும் நிலையில் தமிழகத்தில், அதுவும் சேலத்தில் பீரங்கியை காட்சிப்பொருளாக வைத்திருப்பது, சற்று மிரட்டலாகவே இருக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் கலவரத்தை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சேலம் காவல்துறையினரின் வருண் வாகனத்தையும் கோவை சரக தண்ணீர் பீரங்கியையும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கின்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும், மக்கள் போராட்டத்துக்கு எதிராக இந்த வாகனங்களைப் பயன்படுத்திவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? வேறு காரணங்களுக்காவா? என்பது தெரியாமல் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு வருபவர்கள் இந்த இரு வாகனங்களையும் வேடிக்கை பார்க்கின்றனர்.