விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (12.02.2021) ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் உயிரிழப்பு என்பது 19 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் மட்டுமில்லாது தேசிய அளவிலான தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெடிவிபத்தில் 30க்கும் அதிகமானோருக்குப் பலத்த காயமும், பலருக்கு 80% தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண், 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது. சாத்தூர் அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மொத்தம் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடுசூரங்குடி கற்பகவள்ளி (7 மாத கர்ப்பிணி), அன்பின்நகரம் சந்தியா, மேலப்புதூர் சின்னத்தம்பி, நேசமணி, படந்தால் கோபால், ரவிச்சந்திரன், செல்வி, ரெங்கராஜ், ஏழாயிரம்பண்ணை தங்கலட்சுமி, கண்ணன், நாராயணன், பாக்கியராஜ், கருப்பசாமி ஆகிய 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.
இந்த விபத்தில் நடுசூரங்குடியைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண்ணான கற்பகவள்ளி இறந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துகொண்ட கற்பகவள்ளி, நேற்று வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலைக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் 200 சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதுகுறித்து கற்பகவள்ளியின் உறவினர் கூறுகையில், “அவரது விருப்பப்படி அவர் காதல் திருமணம் செய்துகொண்டார். அவரை அழைத்துச் சென்றவர் அவரை திருமணம் செய்துகொண்டாரா இல்லையா என்பதற்குக் கூட எந்த சாட்சியும் இல்லை. பி.எஸ்.சி விலங்கியல் படித்திருக்கும் கற்பகவள்ளியைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். குடும்ப வறுமை காரணமாகவும், அடிக்கடி குடித்துவிட்டு கணவர் தகராறு செய்வதால் பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அதுவும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் வேலைக்கு அனுப்பியுள்ளார்கள்“ என்றார்.
கற்பகவள்ளியின் தாயார் கூறுகையில், ''என் பிள்ளையவே தூக்கிக்கொடுத்துட்டு உட்காந்திருக்கேன். நல்லபடியா படிக்க வெச்சனே'' என கண்ணீர் வடித்தார்.