Skip to main content

கரோனா பாதித்த கடலாடி லாரி டிரைவர் தூத்துக்குடியில் உயிரிழப்பு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

THOOTHUKUDI DISTRICT DRIVER CORONAVIRUS HOSPITAL


கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து கடலாடியைச் சேர்ந்த லாரி டிரைவர் இன்று (15/05/2020) அதிகாலையில் மூச்சுத்தினறல் காரணமாக உயிரிழந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.


கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி உயிர்ப்பலி வாங்கி வரும் சூழலில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,649 எனவும், தமிழ்நாட்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 எனக் கூறும் புள்ளி விபரம் தமிழகத்தில் இன்று மட்டும், இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக 3 இருக்கலாம் என்றும் கூறுகின்றது. இவ்வேளையில், இன்று (15/05/2020) அதிகாலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் மூச்சுத்திணறலில் இறந்துள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இம்மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் இறந்திருக்க இறப்பின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

இன்று (15/05/2020) அதிகாலை கரோனா வைரஸால் இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவரென்றும், ஊரடங்கின் போது சென்னையிலிருந்து ஊர் திரும்பிய நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்க தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், பலனளிக்காததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐ.எம்.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது தான், சென்னையிலிருந்து திரும்பிய தகவலை மருத்துவர்களிடம் கூற கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் மூச்சுத்தினறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 எனவும், அதில் இருவர் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

இந்த 38 பேரில் 26 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்