ஏற்காடு அருகே, மின் திருட்டை காட்டிக் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயி, பசு மாட்டை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். 42 வயதான இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வடமன். 45 வயதான இவர் விவசாய வேலைகள் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வடமனின் மகளும் அதே ஊரைச் சேர்ந்த இளைஞரும் காதலித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதல் ஜோடிக்கு வரதராஜன் முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ளார். அன்று முதல் வரதராஜனுடன், வடமன் மோதல் போக்கை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் வடமன் தனது தோட்டத்தில் மின் கம்பத்தில் கொக்கி போட்டு யாருக்கும் தெரியாமல் மின்சாரம் எடுத்து பயன்படுத்தியுள்ளார். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் வடமனுக்கு 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகளிடம் தன்னை காட்டிக் கொடுத்தது வரதராஜன் தான் என்று வடமன் கருதினார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த வடமன், மே 31 ஆம் தேதி, தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜனை தீர்த்துக் கட்டுவதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். ஆனால் அங்கு வரதராஜன் இல்லை.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டு வாசல் அருகே கட்டிப் போட்டிருந்த வரதராஜனின் பசு மாட்டை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பசு மாடு உயிருக்குப் போராடியது. அக்கம்பக்கத்தினர் மாட்டை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுமாடு ஜூன் 2 ஆம் தேதி இறந்து விட்டது. இதுகுறித்து வரதராஜனின் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரின் பேரில், ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வடமன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அவர் தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.