கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள வதிஷ்டபுரம் பகுதியைச் சேர்ந்த வேம்பன் என்பவரது மனைவி, சின்னப்பொண்ணு (88) எனும் மூதாட்டி. இவர், நேற்று முன்தினம் (13.07.2021) திட்டக்குடியில் இருந்து தனது உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக பஸ்ஸில் உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே ஒரு கார் வந்து மூதாட்டி அருகே நின்றுள்ளது.
காரில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் மூதாட்டி சின்னப்பொண்ணுவிடம் “எங்கு பாட்டி போக வேண்டும்?” என்று விசாரித்துள்ளனர். மூதாட்டி சின்னப்பொண்ணு, உறவினர் வீட்டிற்குச் செல்வது குறித்து அவர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்தக் காரில் வந்த மூன்று பேரும், பாட்டி சின்னப்பொண்ணுவிடம், “நாங்கள் அந்த வழியாகத்தான் செல்கிறோம். அந்த ஊர் பஸ் வருவதற்கு அதிக நேரமாகும். அதனால், எங்களுடன் வாருங்கள் நாங்கள் அந்த ஊரில் கொண்டு போய் உங்களைப் பாதுகாப்பாக விடுகிறோம்” என்று பேசியுள்ளனர்.
மூதாட்டியும் அவர்களது பேச்சை நம்பி அந்தக் காரில் ஏறியுள்ளார். கார் சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து குடிக்க வைத்துள்ளனர். அதைக் குடித்த மூதாட்டி, சிறிது நேரத்தில் காரிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து பாட்டியைக் கடத்திய அந்த மூன்று பேரும் அவர் அணிந்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 4 பவுன் நகையைப் பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த மூதாட்டியைத் திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ள பல்லவாடி வனத்துறை காட்டுப்பகுதி அருகில் காரிலிருந்து கீழே இறக்கி போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்த மூதாட்டி, அந்த இரவு நேரத்தில் கதறி அழுதுள்ளார். அந்த வழியாக சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் மூதாட்டியின் அழுகுரல் சத்தம் கேட்டு விசாரித்துள்ளனர். அப்போது மூதாட்டி, தனது ஊர், பெயர் பற்றிய விவரங்களையும் வெள்ளையூர் அழைத்துச் செல்வதாக சிலர் காரில் கடத்தி வந்து, நகையைப் பறித்து, காரிலிருந்து தள்ளிவிட்டுச் சென்ற சம்பவத்தைக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் அவர் உடலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதையடுத்து உடனடியாக பாட்டியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்த தகவல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மூதாட்டி சின்னப்பொண்ணுவிடம் விசாரணை செய்தனர். சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், மூதாட்டியைக் காரில் கடத்திச்சென்று நகை பறித்த அந்த மர்ம கும்பலை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.