தமிழகத்தில் கோடைக்காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதே சமயம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. மேலும் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று (17.05.2024) முதல் வரும் 20 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே சிவப்பு நிற எச்சரிக்கையை விடுக்கப்படுகிறது. அதே சமயம் இன்று முதல் மே 21 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாளை (18.05.2024) முதல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. கேரளாவில் 20 ஆம் தேதி அதிகனமழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருணா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், “நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம். அதாவது நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் (19.05.2024) மற்றும் 20 ஆம் தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். இந்த 3 நாட்கள் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அறிவுறுத்தியுள்ளார்.