இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி கும்பல் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச தமிழார்வன் (48). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்துவருகிறார். இவர் கட்சிப் பணி மட்டுமின்றி, மக்களின் பல்வேறு பொது பிரச்சனைகளுக்காக போராட்டக் களத்தில் குரல்கொடுத்து கட்சிப் பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரிடமும் நன்மதிப்பை பெற்றவர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீடாமங்கலம் கடைவீதியில் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி ராஜ்குமார் என்பவர் இளைஞர் இருவரைக் கடுமையாகத் தாக்கி, நிர்வாணப்படுத்தி, ரவுடித்தனம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அவ்வழியாக தனது கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்த நடேச தமிழார்வன் தட்டிக் கேட்டதோடு, ரவுடி ராஜ்குமார் மீது நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளரிடம் புகாரும் அளித்துள்ளார். ஆனால் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் நீடாமங்கலம் காவல்துறையினர் எடுக்கவில்லை.
அதோடு கஞ்சா வியாபாரியான ராஜ்குமாரிடம் புகார்குறித்து தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று (10.11.2021) மாலை நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடேச தமிழார்வன் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது காரை இடைமறித்து, நடேச தமிழார்வனை கீழே தள்ளிவிட்டு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரழந்தார் தமிழார்வன்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து நடேச தமிழார்வன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இப்படுகொலை சம்பவத்தை அடுத்து நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. திருவாரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலை சம்பவத்தின் பின்புலத்தில் நீடாமங்கலம் காவல்துறைக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. படுகொலை நடந்த இடத்தில் செயல்பட்டுவந்த சிசிடிவி கேமரா செயல்படவில்லை என காவல்துறை கூறுகிறது. அதற்கு திட்டமிட்டே அந்த சிசிடிவி காட்சிகளைக் காவல்துறை மறைத்திருக்கலாம எனக் கூறப்படுகிறது.
அதோடு கஞ்சா வியாபாரியான ராஜ்குமார் மீது நடேச தமிழார்வன் கொடுத்த புகார் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக அவரிடமே புகார் குறித்து கூறியதாக தெரிகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருக்கும்போது நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் மட்டும் இல்லாதது கொலையில் ஆய்வாளருக்கு உடன்பாடு இருந்திருக்கலாமோ என சந்தேகம் உள்ளது என்கிறார்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்.
நீடாமங்கலம் காவல்துறையினரோ, “தமிழார்வன் இயல்பாகவே அதிரடியான ஆள். அவரும் வழக்கறிஞராக இருக்கும் அவரது மகனும் கட்டப் பஞ்சாயத்து செய்வதையே தொழிலாக வைத்திருந்தனர். பல இடங்களில் எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருந்தனர். போராட்ட வழக்கைத் தாண்டி அடிதடி வழக்குகளே அவர்மீது அதிகமாக இருக்கிறது. யார் குற்றவாளி என்பதை விசாரித்துவருகிறோம். விரைவில் கண்டுபிடித்து கைது செய்துவிடுவோம். வேண்டுமெற்றே காவல்துறையின் மீது பழி சுமத்துவது நியாயமற்றது” என்கிறார்கள்.