பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக இரண்டாம் முறை தமிழகத்திற்கு மோடி வருகிறார். சென்ற முறை மதுரையிலும், அடுத்ததாக 10 ஆம் தேதி திருப்பூரில் பாஜகவின் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
தமிழகத்திற்கு வரும் மோடிக்கும் கடுமையான எதிர்ப்புகளை கண்டனங்களை தெரிவித்து ''கோ பேக் மோடி'' என அரசியல் கட்சிகள், பெரியாரிய அமைப்புகள், தமிழ் இயக்கங்கள் போராட்டம் செய்து வருகிறது. இந்நிலையில் நாளை திருப்பூர் வரும் மோடிக்கு கண்டன போராட்டங்களை பல்வேறு அமைப்புகள் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இதன் பின்னணியில்தான் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது தமிழக மற்றும் மத்திய போலீஸ். தமிழ்நாடு டிஜிபி தலைமையில் 2 ஐஜி , 6 டிஐஜி, 20 எஸ்பி, 50 டிஎஸ்பி, 100 இன்ஸ்பெக்டர்கள் ,200 எஸ்ஐக்கள், 5000 போலீசார் என மிக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இதற்கு முன்பு மோடி தமிழ்நாட்டில் கலந்துகொண்ட எந்த நிகழ்ச்சிக்கும் இவ்வளவு பெரிய பாதுகாப்பை போலீஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தை காணவரும் பாஜக தொண்டர்களை விட ஐந்து மடங்கு போலீசார் தான் ஒரு நாளுக்கு முன்பே புகுந்திருக்கிறார்கள் என்று பாஜக நிர்வாகிகளே பரபரப்பாக பேசுகிறார்கள்.