தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சிசபைக் கூட்டம் கடந்த ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து தொடங்கி வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அம்பாத்துறை (மேலக்கோட்டையில்) ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அப்பகுதி மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரான ஐ.பெரியசாமியை ஊர் பொது மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்
.
இக்கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அம்பாத்துரை ரவி முன்னிலை வகித்தார். கிழக்குமாவட்ட துணை செயலாளர் தண்டபாணி வர வேற்புரையாற்றினார்.
அப்போது கூட்டத்திலிருந்து பெண்கள் பலர் தங்கள் பகுதியில் லைட் வசதி இல்லை. ரோடு வசதி இல்லை . குடிக்க கூட தண்ணீர் இல்லை. கழிப்பிட வசதி இல்லை முதியோர் உதவித்தொகையை நிறுத்தி விட்டனர் என பல்வேறு கோரிக்கைகளையும் குறைகளையும் கூறி தங்கள் வைத்திருந்த புகார் மனுக்களை ஐபியிடம் கொடுத்து அதை நிறைவேற்றி கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.
அந்த புகார் மனுக்களை எல்லாம் ஒவ்வொன்றாக வாங்கி பிரித்துப் பார்த்து படித்து விட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கிறேன் என தொகுதி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். அதன்பின் கூடியிருந்த தொகுதி மக்களிடம் பேசிய ஐ.பெரிய சாமியோ.... தமிழ் நாட்டில் தற்பொழுது மக்கள்விரோத அரசு தான் நடந்து வருகிறதே தவிர மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது தலைவர் கலைஞர் ஆட்சியின் போது 340 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் கொடுத்தோம். அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி 50 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கூறியது. ஆனால் தலைவரும் மத்திய அரசு வேண்டுமானால் உயர்த்தட்டும் அதை நாம் மக்கள் தலையில் வைக்க கூடாது நாமே அந்த ஐம்பது ரூபாயை கொடுத்து விடலாம் என்று கூறி கொடுத்தார். அதுபோல் கேஸ் விலையை தொடர்ந்து ஏற்றாமல் இருந்தார். ஆனால் இன்று ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்கிறது. அந்த அளவுக்கு பல மடங்கு உயர்த்தி விட்டனர். இதற்கு காரணம் மோடி அரசுதான் அதை மாநில அரசும் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது தலைவர் ஆட்சி இருந்திருந்தால் இந்த நிலைமை நமக்கு வந்திருக்காது. அதுபோல் தலைவர் ஆட்சியின்போதுதான் 24 லட்சம் பேருக்கு இலவச பட்டா கொடுத்திருக்கிறோம். அதேபோல் முதியோர் உதவித் தொகையும் 24 லட்சம் பேருக்கு கொடுத்திருக்கிறோம். அதில் நம்ம தொகுதிக்கு கொடுக்கப்பட்ட முதியோர் உதவித் தொகையில் 12 ஆயிரம் பேருடைய உதவித்தொகையை நிறுத்திவிட்டனர். இதைப்பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சட்டமன்றத்திலேயே பேசினேன். அப்படி இருந்தும் கொடுக்கவில்லை. அந்தப் பாவம் தான் அந்த அம்மாவை ஆட்டிப்படைக்கிறது. அதுலையும் என்ன ஒரு கொடுமை என்றால் அண்ணன், தங்கச்சி இருவருக்கும் கண்ணு தெரியாது என்று தெரிந்து நான் அமைச்சராக இருந்தபோது ஐந்தே நிமிடத்தில் கையெழுத்துப் போட்டு அந்த ரெண்டு பேருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
அந்த உதவித் தொகையை கூட படுபாவிக நிறுத்திவிட்டார்கள். ஆனால் கூடிய விரைவில் உங்களுக்கெல்லாம் நிறுத்தப்பட்ட அனைத்து முதியோர் உதவித் தொகையும் வீடு தேடி வரக்கூடிய காலம் கூடிய சீக்கிரம் வரும் இப்பகுதியில் உள்ள மேலக்கோட்டை, நடுப்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, முருகன் பட்டி உள்பட பல கிராமங்களுக்கு தண்ணீர் வசதி இல்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கொடுங்க என பலமுறை கலெக்டரிடம் வலியுறுத்தினேன். கலெக்டரும் அதிகாரிகளைக் கூப்பிட்டு சொன்னதாக சொன்னார். ஆனால் அதிகாரிகளும் இதுவரை மக்களின் குடிநீர் பிரச்சினையை கூட தீர்த்து வைக்க முன்வரவில்லை . இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன். கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்பொழுது நான் கூட உங்களுக்கு தண்டனை கொடுக்க மாட்டேன். பொதுமக்கள் அந்த அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்கக் கூடிய காலம் வரும். அதுசீக்கிரமாகவருப் போகிறது அதை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதேபோல் 100 நாள் வேலை சரியாக பொதுமக்களுக்கு கொடுப்பதில்லை அதுபோல் கூலியையும் குறைத்து கொடுத்து வருகிறார்கள் அதற்கெல்லாம் அதிகாரிகள் வருங்காலத்தில் பதில் சொல்ல வேண்டும் இங்குள்ள மக்கள் நெசவுத் தொழில் மூலம் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று நினைத்துதான் சாயப் பட்டறை ஒன்றை அமைக்க கோரி இந்த அரசிடம் வலியுறுத்தி அந்த சாயப்பட்டறை கூட என்னுடைய நிதியிலிருந்து ஒரு கோடி தருகிறேன் என்று துறை அமைச்சரான ஒ.எஸ். மணியிடம் கூறியிருந்தேன். அப்படி இருந்தும் இதுவரை சாயப்பட்டறை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. இப்படி மக்கள் விரோத அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய காலம் வெகு தூரம் இல்லை மே 15ல் மத்தியில் ஆட்சி மாற்றம் அவசியம் ஏற்படும் அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராவார் அதன்பின் தமிழகத்தில் ஏற்படும் மாற்றம் மூலம் தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் அதன் மூலம் உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் குறைகளையும் நிரந்தரமாக தீர்த்து வைக்கப்படும் என்று கூறினர்
இக் கூட்டத்தில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரான பிள்ளையார்நத்தம் முருகேசன். ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி. மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் விவேகானந்தன் உள்பட நகர, ஒன்றிய பொறுப்பிலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.