சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் இன்று (02/06/2021) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் மாணவ, மாணவியர்களிடையே இருவேறு கருத்து நிலவுகிறது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும். அனைத்து தரப்பின் கருத்துகளைக் கேட்ட பின் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும். மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக நாளை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் எனப் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கப்படும். தலைமை ஆசிரியர்கள் மூலமாக அவர்களின் பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை கருத்துக்களைக் கேட்டறிந்து அறிக்கை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.