Skip to main content

வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க 12 கோடி லஞ்சம்: சிபிஐ விசாரணை தேவை! அன்புமணி

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
2

 

உலகில் யாருக்கு உடல் உறுப்பு தேவைப்பட்டாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தால் சாதித்து விடலாம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி,  இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும் என்கிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்.  இது குறித்த அவரது அறிக்கை :

’’தமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்புதான ஊழல்கள் குறித்து மீண்டும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்  வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகள் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சேலம் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கட்டாயமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகள் வெளிநாட்டு நோயர்களுக்கு வழங்கப்பட்டதில் விதிமீறல்கள் நடந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

 

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே 18-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சாலைவிபத்தில் சிக்கி காயமடைந்தார். சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அடுத்த இரு நாட்களில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை வழங்கிய போதிலும் அதை ஏற்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். மொத்தம் 3 முறை மருத்துவமனை நிர்வாகம் கோரியும் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க குடும்பத்தினர் மறுத்துவிட்ட நிலையில், நான்காவது முறை கட்டாயமாக ஒப்புதல் பெறப்பட்டு அவரது உறுப்புகள் சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி மணிகண்டன் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக முதலமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதினார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் தான் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

 

மணிகண்டனிடமிருந்து பெறப்பட்ட இதயமும், நுரையீரலும் விதிகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்காக பெறப்பட்ட இதயம் சட்டவிரோதமாக லெபனான் நாட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட நுரையீரல் அங்கு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 5 உள்ளூர் நோயாளிகளுக்கு வழங்கப்படாமல் இஸ்ரேல் நாட்டு நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு உறுப்பு பொறுத்தப்பட்ட நோயாளிகளும் இறந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், உள்ளூர் நோயாளி ஒருவருக்கு பெறப்பட்ட சிறுநீரகமும் இன்னொருவருக்கு வழங்கப்பட்டது உறுதியாகியுள்ளது.

 

உள்ளூர் நோயாளிக்கு பொருத்தப்பட வேண்டிய உறுப்பு அதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஊரில் இல்லாததால் வெளிநாட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் தலைமை மருத்துவர் ஊரில் இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நிகழ்வில் தமிழக அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் உறுப்பு மாற்று ஆணையத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு  ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட உறுப்பை வழங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், உடலுறுப்பு மாற்று ஆணையத்திற்கு அயல் பணியில் வந்த இரு பணியாளர்கள் தான் இவை அனைத்துக்கும் காரணம் என்றும், அவர்கள் இருவரும் தாங்களாகவே பதவி விலகி விட்டனர் என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகள் அனைவரும் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவின் உடல் உறுப்பு மாற்று சந்தையாக தமிழகம் மாறியுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை கொடையாக பெற்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு பொறுத்தி அவர்களின்  உயிரைக் காப்பது புனிதமான செயலாக கருதப்படுகிறது. ஆனால், அந்த உறுப்புகளை உள்ளூர் ஏழை நோயாளிகளுக்கு வழங்காமல் வெளிநாட்டு நோயாளிகளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பொருத்துவதன் மூலம் புனிதமான செயலை சில மருத்துவமனைகளும், மருத்துவர்களும் வணிகமாக்கியுள்ளனர். இதற்கு அரசு உயரதிகாரிகள் சிலரும் துணை போயுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 95 பேருக்கு 127 உறுப்புகள்  விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக   எந்த விசாரணையும் நடத்தப்பட வில்லை; எந்த மருத்துவமனை மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

சென்னை அடையாறு, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக  வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை அடையாறு, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் தான் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாகவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக  வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சராசரியாக ரூ.12 கோடி வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. உடல் உறுப்புதான ஊழலில் தமிழக அரசின் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாற்றுகள் பற்றி தமிழக அரசின் விசாரணைக்குழு எந்த விசாரணையும் நடத்தியதாக தெரியவில்லை.

 

உடல் உறுப்பு தான ஊழல் குறித்து கடந்த சில மாதங்களாக நான் தொடர்ந்து குற்றச்சாற்றுகளைக் கூறி வருகிறேன். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுப்பதைத் தடுக்கும் நோக்குடன் தான் தமிழக அரசு மேலோட்டமாக விசாரணை நடத்தி, அயல்பணியில் வந்த பணியாளர்கள் மீது பழியைப் போட்டு, முக்கிய அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றியுள்ளது. உறுப்பு தான ஊழலின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இதன் பின்னணியில் பல பெரிய மனிதர்கள் இருப்பதாலும், கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டிருப்பதாலும் இது குறித்த உண்மைகளை மத்தியப் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கப்பிரிவு ஆகிய அமைப்புகளின் விசாரணையால் தான் வெளிக்கொண்டு வர முடியும்.

 

தமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்பு தான ஊழல்கள் என்பது ஊடகங்களில் வெளியாகியுள்ளதைப் போன்று சாதாரணமான ஒன்றல்ல. ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு இதில் ஊழல் நடைபெறுகிறது. அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். உலகில் யாருக்கு உடல் உறுப்பு தேவைப்பட்டாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தால் சாதித்து விடலாம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி,  இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், தமிழ்நாட்டு காவல்துறையால் இது சாத்தியமில்லை என்பதால் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதுகுறித்து தமிழக ஆளுனரிடமும், சி.பி.ஐ. இயக்குனரிடமும் விரிவான புகார் மனுவை அளிக்க உள்ளேன்.’’

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.