சென்னை ஆவடி ராமலிங்கபுரம் முதல் தெருவிலுள்ள குழந்தைகள் விளையாடும் அங்கன்வாடி மையத்தை ஒட்டியே ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் உள்ளது என்ற அதிர்ச்சித்தகவல் நக்கீரனுக்கு கிடைக்க உடனே நாம் ஆக்ஷனில் இறங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கொண்டு சென்று மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் சிக்கியக் குழந்தையின் உயிரை மீட்க முடியாதது பொதுமக்களின் இதயங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனியும் இப்படியொரு கொடூர மரணம் ஏற்படக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என ஒட்டுமொத்த மக்களும் கூக்குரல் கொடுத்துக்கொண்டிருக்க, ‘உங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளனவா? புகைப்படம் மற்றும் முழுத்தகவலை 96770 81370 என்ற நக்கீரன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அல்லது facebook.com/makkheeran/ பக்கத்தின் இன்பாக்ஸில் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுக்கும் தகவல், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கொண்டுசெல்லப்படும்’ என்று அறிவித்திருந்தோம்.
தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மூடப்படாமல் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளின் இடம் மற்றும் புகைப்படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் சமூக ஆர்வமுள்ள பள்ளிக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும்.
இந்நிலையில், சென்னை ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரம் முதல் தெருவில் குழந்தைகள் அதிகம் உலாவும் பால்வாடி எனப்படும் அங்கன்வாடி மையத்தின் அருகிலேயே ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் உள்ளது என்று நமக்கு தகவல் கிடைக்க, நாம் உடனடியாக தாசில்தார் சரவணன் கவனத்துக்கொண்டுசென்றோம். அடுத்த சில மணிநேரங்களிலேயே, ‘வி.ஏ.ஓ. ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க சொல்லிவிட்டேன். அதில், குழந்தைகள் வீழ்ந்துவிடாத அளவிற்கு உடனடியாக தற்காலிகமாக மூடிவிட்டோம். நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்துவிட்டேன்’ என்றார் நாம் தகவல் கொடுத்த சில மணிநேரங்களிலேயே. அவருக்கு, நன்றி சொல்லிவிட்டு வி.ஏ.ஓ. ஜெயப்பிரகாஷிடம் நாம் பேசியபோது, ‘விரைவில் அந்த ஆழ்துளை கிணற்றில் மழை நீரை சேமிக்கும் விதமாகவும் குழந்தைகள் அதில் வீழ்ந்துவிடாமல் இருக்கவும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இன்னும், எங்கெல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருக்கின்றனவோ அதெல்லாம் மூடும்வரை நக்கீரனின் இப்போராட்டம் தொடரும்.