தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி தினம் உள்ளிட்ட 6 முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருப்பொருளில் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கிராம சபை கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இந்த காணொளியை தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டு, “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்ற தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், ஜனநாயகத்தின் அடித்தளமான கிராம சபைக் கூட்டங்களில் காணொளியில் உரையாற்றினேன். வலிமையான, உண்மையான மக்களாட்சி நாட்டிலும் தொடர, மாற்றங்கள் கிராமங்களில் இருந்து தொடங்கட்டும். எல்லார்க்கும் எல்லாம் எனும் நாளைய இந்தியா நமதே” எனத் தெரிவித்துள்ளார்.