நீலகிரி மாவட்டம், கூடலூர், தோட்டமூலா உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், ஆங்காங்ககே மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அதனை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது மாவட்ட நிர்வாகம். கனமழையால் தரைப்பாலங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட எஸ்.பி.ஆஷிஷ் ராவத் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், கூடலூர் பகுதியில் யாரும் இரவில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்; கனமழை நீடிக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். காற்றின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதால், மரங்கள், தடுப்புச் சுவர், அருகே நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தொடர் கனமழை காரணமாகவும், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையடுத்தும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14/07/2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.