நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகாவில் அமைந்துள்ளது ராதாமங்கலம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 60 வயதான இவர், கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். தினந்தோறும் வேலை முடித்து விட்டு வீடு திரும்பும் ராஜேந்திரன், வயது முதிர்வினால் தனிமையிலேயே இருந்து வந்தாக கூறப்படுகின்றது. இதனால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். தனிமையை விரட்டும் விதமாக, வீட்டின் அருகே இருந்த குழந்தைகளிடம் விளையாடி பேச ஆரம்பித்துள்ளார்.
தொடக்கத்தில் இவரின் வயதான தோற்றத்தைக் கண்டு குழந்தைகள் அச்சப்பட்டு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், தொடர்ந்து குழந்தைகளிடம் நெருங்கி சென்ற ராஜேந்திரன், அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை எல்லாம் வேலைக்கு சென்று திரும்பும் போது வாங்கி வந்து கொடுத்துள்ளார். இந்த நடைமுறையை தொடர்ச்சியாக பின்பற்றிய முதியவர், அதன் மூலம் குழந்தைகளின் பெற்றோர்களிடமும் நன்மதிப்பை பெற்றதாக சொல்லப்படுகின்றது. இதனால், அப்பகுதி பெற்றோர்களும் குழந்தைகளை முதியவரிடம் விளையாட அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து, அண்மையில் ராதா மங்கலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், விளையாடச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாமல் இருந்ததைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். உடனே, அக்கம் பக்கம் எல்லாம் தேடி அலைந்துள்ளனர். ஆனால், அப்பகுதியில் எங்கும் குழந்தை காணவில்லை. நீண்ட நேரம் கழித்து, இரவில் அழுதுகொண்டே சிறுமி வீட்டிற்கு ஓடிவந்துள்ளார். சிறுமி வந்ததை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட பெற்றோர், அவள் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்ததை கண்டு சந்தேகமடைந்தனர். இதையடுத்து, சிறுமியிடம் தனிமையில் பேசிய பெற்றோர், சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே, நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், அதே பகுதியை சேர்ந்த முதியவர் ராஜேந்திரனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கே அவரிடம் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தன. அந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ராஜேந்திரன் நடந்ததை வாக்கு மூலமாக போலீசாரிடம் தெரிவித்தார். அதில், சம்பவத்தன்று எப்போதும் போல வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் முதியவர் சென்றுள்ளார். சிறுமி முகம் தெரிந்தவர் என்பதால் அன்போடு, "தாத்தா.. தாத்தா" என அழைத்துக்கொண்டே அருகில் ஓடிச்சென்றுள்ளார். அந்த நேரம் பார்த்து தெருவில் ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முதியவர், "தாத்தா உனக்கு மிட்டாய் வாங்கி தரேன். என் கூட வரியா ?" என அழைக்க சிறுமியும் ஆசையுடன், ''வாங்க தாத்தா போலாம்.." என ராஜேந்திரனுடன் சென்றுள்ளார்.
சிறுமியை இரவில் அழைத்துக்கொண்டு சென்ற முதியவர், திடீரென்று ஒதுக்குப்புறமாக புதருக்குள் இழுத்து சென்றுள்ளார். இருட்டைக் கண்டு சிறுமி அச்சப்பட்டு, அவரிடமிருந்து தப்பிக்க முயர்ச்சித்துள்ளார். ஆனால், உடனே சுதாரித்துக்கொண்ட முதியவர் சிறுமியின் வாயைப் பொத்தி பலவந்தமாக புதரினுள் கொண்டு சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். ஒருகட்டத்தில், முதியவரின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி இருட்டில் ஓடிச்சென்று வீட்டினுள் நடந்ததை சொல்லி கதறி அழுதுள்ளார். அதனை தொடர்ந்து தான் போலீசாருக்கு பெற்றோர்கள் தகவல் அளிக்க முதியவர் ராஜேந்திரன் பிடிபட்டார். இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட முதியவரின் மீது, நாகப்பட்டினம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து, வழக்கு விசாரணை நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் டிசம்பர் 12 தேதி இறுதி தீர்ப்பளித்த நீதிபதி மணிவண்ணன், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காரணத்திற்காக முதியவர் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். ஒருவேளை அபராதத்தை கட்ட தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்படும் என்றார். இதில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து வழக்கை முடித்து வைத்தார். இதையடுத்து, சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், 'சித்தா’ பட பாணியில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்து, பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.