'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “கேரளத்தில் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு கேரளா தெற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் வழியாக தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்குச் செல்லும். இதனால் அப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வரும் தினங்களில் வடமேற்கு திசையில் இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகிச்செல்லும்.
அந்தமான் கிழக்கு கடல் பகுதிகளில் நாளை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து அந்தமான் தெற்கு கடல் பகுதிகளில் நிலவும். இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை- காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை வடகடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்" என்றார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.