ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியிலிருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வழக்கமாக சாதாரண நாட்களில் 6000 தக்காளிப் பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனையானது. ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயரத் தொடங்கியது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது.
ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஹோட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக விலையும் சரியத் தொடங்கியது. ஒரு கிலோ ரூ.160 க்கு விற்கப்பட்ட தக்காளி படிப்படியாகக் குறைந்து ரூ.-20 முதல் ரூ.25-க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு, சத்தியமங்கலம், ஆந்திரா, ஓசூர் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 7 ஆயிரத்து 500 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது. சின்ன பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.130-க்கு விற்பனையானது. பெரிய பெட்டி (26 கிலோ) தக்காளி ரூ. 250-க்கு விற்பனையானது. இன்று ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.10 முதல் ரூ. 15-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தக்காளியை கிலோ கணக்கில் வாங்கி சென்றனர்.