திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இனாம்காரியந்தல் எனும் கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை அகற்றவேண்டும் என கடந்த ஓராண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
மார்ச் 9 ஆம் தேதி சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்களை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.
“சுங்கச்சாவடி அலுவலகம் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையே ஒப்புதல் கடிதம் தந்துள்ளது. வரைபடங்களும் அதனை உறுதி செய்கின்றன. வீடற்ற ஏழை மக்கள் நீர் வழிப்பாதையில், சாலையோரங்களில் குடிசைப்போட்டு தங்கினால் மனிதாபிமானமே இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என குடிசைகளை இடிக்கும் அதிகாரிகள், மக்களைச் சுரண்டும் தனியார் நிறுவனம் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளது அதனை ஏன் இடிக்க மறுக்கிறீர்கள்” என பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர், “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது மத்திய அரசு சம்பந்தப்பட்ட விவகாரம் மாநில அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது, நீங்கள் மத்தியில் கேள்வி கேளுங்கள்” என்றார்.
ஒரே சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும்போது இரண்டுக்குமான இடைவெளி 60 கி.மீ இருக்கவேண்டும் என்கிறது விதி. திருவண்ணாமலை டூ வேலூர் சாலையில் இனாம்காரியந்தல் சுங்கச்சாவடிக்கும் கண்ணமங்களம் சுங்கச்சாவடிக்கும் இடையிலான தூரம் 57 கி.மீ. இப்படி பல விதிமுறை மீறல்களை செய்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும், அதனை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
“தற்போதைக்கு ஆக்கிரமிப்பு உள்ளதா என ஆய்வு செய்கிறோம், உள்ளுர் மக்களுக்கு கட்டணச்சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி தந்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன். இந்த சுங்கச்சாவடி மூடப்படவில்லையெனில் அறிவிப்பின்றி தொடர் போராட்டம் தினம், தினம் நடத்தப்படும்” என்றார்