ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ''பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த தேர்தல் திண்டுக்கல்லில் எப்படி எம்.ஜி.ஆர் ஒரு திருப்புமுனையை கட்டினாரோ அதைபோல் கிழக்குத் தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும். இன்று தனித்தே களத்தில் நின்றிருக்கிறோம். அதுமட்டுமல்ல நமது கூட்டணியைப் பொறுத்தவரை இரண்டு மூன்று நாட்களுக்குள் யார் யார் அமையப் போகிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். இன்று எல்லோரும் இப்படி அதிமுக அணி அணியாக பிரிந்து கிடக்கிறதே என்றுகூட சொல்கிறார்கள். 98.5 சதவிகிதம் நாம் ஒரே அணியில் எடப்பாடி தலைமையில் இருக்கிறோம். இந்த வெற்றி சரித்திரம் சொல்லும் வெற்றியாக இருக்கும்'' என்றார்.