2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் எனவும், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இன்று செப்.28 ஆம் தேதி என்ற நிலையில் இன்று மட்டுமே பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் தாள்கள் பெறப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செப்.30 அரையாண்டு முடிவு நாள் என்பதால் 29 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றால் செப்.30 வங்கிகளில் மாற்றுவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழியர்கள் 2000 ரூபாயை பயணிகளிடம் இருந்து பெறக்கூடாது. அப்படி பெற்றால் 2000 ரூபாயை பெற்றவர்களே அதற்கு பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.