தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐ,, டி.என்.பி.எஸ்.சி. ஆகியன 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரை முதலில் மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பின் சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி, இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமார் உள்பட பலரைக் கைது செய்துள்ளது. மேலும், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த விசாரணையில், குரூப் 2 ஏ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், குரூப் 4 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அழியும் மையை பயன்படுத்தியதாக சிபிசிஐடி தெரிவித்திருப்பது, முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகவே உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தரப்பில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகளின் ஆசியுடன் நடந்துள்ள இந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டுமென்றால், இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, இரண்டு வாரங்களில் தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐ, டி.என்.பி.எஸ்.சி. ஆகியன பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.