வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில் இன்ஜின் பெட்டியில் இருந்து கழன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
'விவேக் எக்ஸ்பிரஸ்' ரயிலானது இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி நோக்கிப் புறப்பட்டு சென்றது. சரியாக 8.55 மணிக்கு வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள முகுந்தராயபுரம்-திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் இன்ஜின் பெட்டி தனியாக கழண்டது. இன்ஜினையும் ரயில் பெட்டிகளையும் இணைக்கும் கப்ளிங் கழண்டு சென்றதால் ரயில் நின்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு பெட்டிகளோடு இணைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் பாதி வழியில் நிற்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த மார்க்கத்தில் செல்லும் இதர ரயில்கள் ஆங்காங்கே நடுவழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் அந்த பகுதி நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.