மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க மரங்களை அதிக எண்ணிக்கையில் நட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் வனப்பரப்பு நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த அச்சுறுத்தலைத் தடுக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கவும் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி பசுமைக்காடுகளின் பரப்பளவு 1880.72 சதுர கி.மீயாகவும், இலையுதிர்க் காடுகளின் பரப்பளவு 13,394.73 சதுர கி.மீட்டராகவும், முள்புதர் காடுகளின் பரப்பளவு 4291.84 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் பசுமைக்காடுகள், இலையுதிர்க் காடுகளின் பரப்பளவு படிப்படியாகக் குறைந்து 2050ஆம் ஆண்டில் பசுமைக்காடுகளின் பரப்பளவு 1280.8 சதுர கிலோமீட்டராகவும், இலையுதிர்க் காடுகளின் பரப்பளவு 10,941 சதுர கிலோமீட்டராகவும் இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் முள்புதர் காடுகளின் பரப்பளவு 71% அதிகரித்து 7344.70 சதுர கிலோ மீட்டராக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றம் தான் இதற்குக் காரணம் என்றும், இதன் தாக்கம் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள 26 தமிழக மாவட்டங்களில் உணரப்படும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தச் சீரழிவை தடுப்பதற்காக தமிழக அரசு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வனப்பரப்பை இப்போதுள்ள 24 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக உயர்த்துவதற்கான பசுமைத் தமிழகம் திட்டத்தின் செயலாக்கத்தை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின்படி மரங்கள் நடப்படுவதை மாபெரும் இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து விதைகளை வனத்துறையினர் அதிக எண்ணிக்கையில் சேகரிக்க வேண்டும். அவற்றைக் கொண்டு செடிகளை உருவாக்கி, 4 அடி உயரம் வளர்ந்த பிறகு மாநிலம் முழுவதும் பொது இடங்கள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டுத் திடல்களின் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில் நடச் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுமக்களிடம் வழங்கி அவர்களின் வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் மரக்கன்றுகளை வளர்ப்பதை தமிழக வனத்துறை ஊக்குவிக்க வேண்டும்.
திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயில் வளாகத்தில் இரு மாதங்களில் மட்டும் 7700 மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் அனைத்தையும் இலவசமாக வழங்கியது வனத்துறை தான். இதற்காக வனத்துறைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இதேபோல் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மரக்கன்றுகளை லட்சக்கணக்கில் நடுவதற்கு தமிழக வனத்துறை முயற்சி எடுக்க வேண்டும். இதற்காகவே வனத்துறையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவும் வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் வேலூர், சேலம், திருத்தணி, திருவண்ணாமலை , திருச்சி, அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள மலைப் பகுதிகளையும், சமுதாயக் காடுகளையும் பசுமைப் பகுதிகளாக மாற்றி, அவற்றில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும். அதன் மூலம், மலையோர நகரங்களின் வெப்பத்தை குறைக்க முடியும். சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிக்க நகரங்களில் காடுகளை வளர்க்க முடியாது என்றாலும் கூட, அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படும் போது ஒதுக்கப்படும் திறந்தவெளி பரப்புக்கான நிலங்களில் மியாவாக்கி முறையில் நகர்ப்புற அடர்வனங்களை உருவாக்கலாம். சிங்கப்பூரில் இருப்பதைப் போன்ற சாலைகளின் மையங்களிலும், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளில் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் பசுமைப் போர்வையை ஏற்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகம் நிலவும் பகுதிகளில் உள்ள மலைகளில் மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்காக ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகளை வீச வேண்டும். மரங்களை அதிக அளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். மேலும், கட்டங்களுக்குள் தேவைப்படும் குளிர்சாதனத் தேவையில் 30 விழுக்காட்டைக் குறைக்க முடியும். இந்த உன்னத நிலையை அடைவதற்காக அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம். மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம். அதன் மூலம், நடப்பு பத்தாண்டில் இல்லாவிட்டாலும், அடுத்த பத்தாண்டிலாவது வெப்பத்தின் கடுமையின்றி இதமான வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்